News
மேட்டுப்பாளையத்தில் தொடரும் ஒற்றை காட்டுயானை அட்டகாசம்; ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை, தென்னை நாசம்
SimpliCity News Team · 28 Jun 2020
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாத காலமாக நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகளால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
குரும்பனூர், தாசம்பாளையம், ஓடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதகாலமாக ஒரு ஒற்றை காட்டுயானை இரவு நேரங்களில் மலை அடிவார விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன், இரவு நேரத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, மக்காசோளம் போன்ற பல்வேறு விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
தினமும், மாலை 6 மணிக்கு மேல் காட்டை விட்டு வெளியேறும் இந்த யானை வனத்துறை எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் அச்சப்படாமல் இரவு முழுவதும் ஒவ்வொரு விவசாய தோட்டங்களாக நுழைந்து பயிர்களை உண்டு.மற்றும் சேதம் செய்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு தாசம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன், சின்னராஜ், ஹக்கிம் என்பவர்களது தோட்டங்களுக்குள் நுழைந்த அந்த யானை 500 க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் 10 தென்னை மரங்களையும் சாய்த்து நாசப்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரகாலத்தில் மட்டும் ஒவ்வொரு தோட்டங்களிலும் நுழையும் அந்த ஒற்றை யான,இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளதாக கூறும் விவசாயிகள் வனத்துறை எடுக்கும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
யானையை விரட்ட வரும் வனத்துறையினர் பெயரளவில் பட்டாசுகள் வெடிக்க செய்தவதாக கூறும் விவசாயிகள், அதன் பின்னர் போதிய பட்டாசுகள் இல்லை என திரும்பி சென்றுவிடுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ள விவசாயிகள் வனத்தை விட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க வனத்துறை தகுந்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.